......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

திருக்கோயில் அமைப்பு

செம்பாக்கம் என வழங்கும் வடதிருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருப்போரூர் - செங்கற்பட்டு வழித்தடத்தில், திருப்போரூரிருந்து 7-வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. திருக்கோயில் செம்பாக்கம் ஊருக்கு வடகிழக்கு மூலையில் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. திருக்கோயில் வடக்குப் பக்கத்தில் ஏரி, திருக்குளம் மற்றும் அருள்மிகு செல்லியம்மன் (காளி) சப்த கன்னிகள் திருக்கோயிலும், கிழக்குப் பக்கத்தில் வயல்களும், தெற்குப் பக்கத்தில் அருள்மிகு விருத்தாசலம் குமாரதேவர் மடமும், மேற்குப் பக்கத்தில் ஊரும், ஊரை அடுத்து காடுகள், மலைகள் முதலான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள புண்ணியத் திருத்தலமாகும். மேலும் செம்பாக்கம் ஊரில் ஒவ்வொரு தெருக்கள் முனையில் விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளதோடு, அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள், துர்க்கை, பைரவர், செல்லியம்மன் (காளி), நாககன்னி, வேண்டவராட்சி அம்மன், செங்கேனி அம்மன், கங்கையம்மன், எல்லை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு தனிக்கோயில்களும், அருள்மிகு குமாரதேவர் மடம், சித்தர் பொன்னம்பல சுவாமி மடம், நால்வர் மடம் முதலான மடங்களும் மற்றும் 3 பஜனைக் கோயில்களும் அமைந்த ஊர். ஆதியில் 33 கோயில்கள், 33 திருக்குளங்கள், 33 தெருக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. காலம் மற்றும் இயற்கை மாற்றத்தின் காரணமாக, திருக்குளங்கள் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த அமைப்பு எந்த ஊரிலும் குறிப்பாக கிராமங்களில் காண முடியாத சிறப்பாகும். மேலும் திருப்போரூர் - செங்கற்பட்டு வழித்தடத்தில் அதாவது ஊருக்கு வரும் வழியில் அன்பர்கள் வசதிக்காக இறைபணி மன்றம் மூலமாகத் திருக்கோயில் தோரணவாயில் (நுழைவு வாயில்) அமைக்கப்பட்டுள்ளது.