......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

தல வரலாறு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சம்பு என்ற சிற்றரசர் தனக்கு பல ஆண்டுகளாக மகப்பேறு இன்றி திருத்தல யாத்திரை மேற்கொண்டபோது செம்பாக்கம் என வழங்கும் வடதிருவானைக்காவில் தேர்க்காலில் அச்சுமுறிந்து தலயாத்திரை தடைப்பட்டது. அப்போது அரசன் சிவ சிந்தனையில் ஆழ்ந்து கண்துயின்றபோது, சிவபெருமான் உமாதேவியுடன் காட்சி தந்து, நீ இங்கு ஒரு சிவாலயம் எழுப்பி இத்திருத்தலத்திற்கு அருள்மிகு சம்புகேசுவரம் எனப்பெயரிட்டு, சிவபூசை செய்யுமாறும், தான் அழகாம்பிகை சமேத சம்புகேசுவரராய் அருள்பாலித்து வேண்டும் அடியார்களுக்கு வேண்டுவதை நல்குவதாகவும் உனக்கு நன்மக்கட்பேறு பயக்கும் என்று கூறி மறைந்தருளினார். கண் விழித்த அரசன் ஆனந்தக் கண்ணீர் மல்கி எம்பெருமான் சிவபெருமானுக்கு ஒரு சிவாலயம் எழுப்பி இத்திருத்தலத்திற்கு சம்புகேசுவரம் எனப் பெயரிட்டு அழைத்ததாக வழிவழியாக கூறப்படுகிறது. செம்பியன் என்ற சோழ மன்னரும் இத்திருத்தலத்திற்கு வந்து மகப்பேறு பெற்றதாகவும் கூறப்படுகிறது.
நைமி சாரண்யத்தில் இருபத்தாராயிரம் முனிவர்கள் வீற்றிருக்க சூத புராணிகர் உத்தர சம்புகேசுவரத் தலப்புராணத்தை விரிவுரையாற்றிய போது ஐந்தெழுத்தும், ஆறெழுத்தும் ஒரு சேர நின்று உணர்த்துவதும், ஐந்து சபை நடராசர் அருட்காட்சியும் காணும் திருத்தலமும், ஆறுபடைவீட்டுக் காட்சியும் கொண்ட திருமுருகனாய் காட்சிப் கொடுத்த திருத்தலம் சம்புகண்டம் என்று சொல்லப்படுகின்ற பாரத நாட்டின் தென் பகுதியில் தமிழ்நாட்டில் தொண்டைவள நாட்டில் உள்ள வடதிருவானைக்கா உத்தர சம்புகேசுவரம் என்று சொல்லி புராணத்தில் உள்ள முப்பத்திரண்டு படலங்களை விளக்கியதாக உத்தர சம்புகேசுவர தலபுராணம் நைமி சாரண்ய படலத்தில் கூறப்பட்டுள்ளது. தல புராணத்தில் இந்திரன், நாரதர், சித்தர்கள், கந்தவர்கள், நவக்கிரகங்கள், நாக ராசாக்கள், நாக கன்னியர்கள் முதலானவர்கள் வந்து வழிப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் கீழ் குறிப்பிடப்பட்டவைகள் முக்கியமானதாகக் கருதப்படுவதோடு திருத்தலத்தின் பெருமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
இத்திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் பெருமைபெற்றது. நாவல் மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் பழைய திருத்தலம். ஐந்து லிங்கக் காட்சியும், ஐந்து சபை நடராசர் காட்சியும், ஆறுபடைவீட்டு திருமுருகன் காட்சியும், அகத்தியர் முதலான ஏழு முனிவர்கள் கண்டுகளித்த திருத்தலம். திருநீறு மற்றும் ஐந்தெழுத்தின் மகிமையை உணர்த்தும் திருத்தலம். சித்தர்களும், முனிவர்களும், யோகீசுவரர்களும் நித்தம் வழிப்பட்டு பரமனைக் கண்டுகளிக்கும் திருத்தலம் என்று 1 முதல் 9 வரை உள்ள படலங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திரனிடம் நாரதர் வடதிருவானைக்கா திருத்தல மகிமையைச் சொல்லும் போது அசிரத்தையுடன் இருந்ததால், இந்திரனுக்குப் பேராபத்து ஏற்பட்டு, ஐந்தெழுத்துண்மையும், திருநீற்று மகிமையை உணர்ந்து வடதிருவானைக்கா திருத்தலம் வந்து வழிபட்டதாக இந்திரப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் வந்து வழிப்பட்டத் திருத்தலமென்று நவகோட் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
கந்தர்வர்களில் தலைச்சிறந்தவனான சித்திராங்கதன் இத்திருத்தலத்துக்கு வந்து பல ஆண்டுகள் சிவதத்துவத்தை உணர்ந்து வழிப்பட்டுச் சென்றதாக கந்தருவப் படலத்தில் கூறப்பட்டள்ளது.
அருள்மிகு சம்புலிங்கத்தின் அருள் திறனை, உலகுக்கு உணர்த்த 32 நாகலோகத்து நாக கன்னியர்கள், வடதிருவானைக்கா உத்தர சம்புகேசுவரம் வந்து, சோமவாரம் விரதம் இருந்து வழிப்பட்டதோடு, அழகம்மையின் அருள்பெற்ற மூத்த நாககன்னி, சிவசக்தியின் பெருமையைப் பரப்புவதற்காக, தனக்கென ஓரிடங்கண்டு, அருளாட்சி செய்ய முற்பட்ட திருத்தலம். இதற்காக ஊருக்கு வரும் வழியில் நாக கன்னிக்குத் தனிச் சந்நதி இறைபணி மன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசுகி அனந்தன், கார்கோடகன், ஆதிசேசன் முதலான நாகராசாக்களும் வந்து தரிசித்துச் சென்றதாக நாக கன்னியர் படலத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக நாகங்கள் அடிக்கடி சம்புகேசுவரர் திருக்கோயிலுக்குள் வந்து செல்வதைக் காணமுடிகிறது.
சுந்தரன் என்ற வித்தியாதரன் பல்வேறு கலைகளையும் சித்துக்களையும் அறிந்தவன். வீணை மூலம் ஏழிசைப்பாடி பரமசிவனைப் போற்றும் திறம் பெற்றவன். இவனுக்குப் போட்டியாக அந்தரவாசி என்றவன் எதிர்ப்பாக இருந்து பல துன்பங்களை பல வகையிலும் கொடுத்து வந்தான். மனமுடைந்த சுந்தரன் கார்கோடக முனிவரை சந்தித்து, முனிவர் கரத்தால் சம்புகேசுவரர் திருநீற்றைப் பெற்று அவர் அறிவுரைப்படி சம்புலிங்கத்தை வழிப்பட்டு பல வரங்களும் பெற்று பல்வேறு இசைகளைப் பாடி பரமனையும், பராசக்தியையும் வாழ்த்துகிறான். அவ்விசை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தரவாசி சுந்தரனிடம் வந்து பணிந்து சீடனாகிறான். எந்த வித்தையும் நொடிப்பொழுதில் சம்புகேசுவரர் திருநீறு அணிந்தால் பெறலாம் என்ற விவரங்களை வித்தியாரண்ய படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
காசி என்ற வாரணாசியில் பிறந்த காசிநாதன் பற்பல திறமைப் பெற்றவன். பெரிய வணிகன். வணிகத்தில் பல்வேறு இடர்கள் பட்டு துன்பத்திலிருந்து விடுபட, தருமசீலன் என்ற சோதிடமுனர்ந்த சித்தரை அணுகி, அவர் ஆலோசனைப்படி, உத்தர சம்புகேசுவரம் வந்து விநாயகப்பெருமானை நோக்கி விரதம் இருந்து சம்புகேசுவர் அழகம்மை அருள்பெற்று அளவற்ற செல்வங்களைப் பெற்றதாக காசிநாதப் படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
தென்பாண்டி நாட்டுத் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்த சிவச்சீலன் என்பவன் கங்கா நதியில் நீராடி காசிவிசுவநாதரைக் காணவேண்டுமென்று சிவநெறியைக் கடைப்பிடித்து பல்லாண்டு தவமிருந்து, பிறகு காடுவனம் கடந்து திருக்கழுக்குன்றம் அடைந்தான். அங்கு உறங்கும்போது கனவில் ஒரு சித்தர் தோன்றி உத்தர சம்புகேசுவரம் செல் என்று கட்டளையிட அவ்வாறே உத்தர சம்புகேசுவரம் வந்தான். நாககன்னி காட்சி கொடுத்து ஞானம் உணர்த்தினாள். கங்கா தேவி காட்சிக் கொடுத்து அந்தரத்திலிருந்து கங்கா தீர்த்தம் வரவும் நீராடினான். அப்போது சம்புலிங்கத்திலிருந்து பேரொளித் தோன்றியதை உணர்வினால் உணர்ந்து விசுவநாதரும் விசாலாட்சியும் காட்சி கொடுத்ததைக் கண்டுகளித்தான். இந்த மகிமையைக் காசியில் பரப்ப வாரணாசி சென்று கங்காதேவியின் அருள்பெற்று கங்காதரன் நாமம் பெற்று கைலாயம் சென்று இறைவனை வணங்கி மீண்டும் உத்தர சம்புகேசுவரம் வந்து பன்னிரண்டாண்டுகள் அழகாம்பிகை சமேத சம்புகேசுவரரை வழிப்பட்டதாக கங்காதரப்படலத்தில் கூறப்பட்டுள்ளது.
விதர்ப்ப தேசத்தில் பிறந்த வீரசிம்மன் என்ற மகாராசன் சக்கரவர்த்தியாக வேண்டுமென்று விரும்பினான். விந்திய மலையில் உள்ள சுந்திர முனிவரை தரிசித்து தன் விருப்பத்தை கூற அவரும் ஐந்து சபை நடராசன் திருக்கோலமும், ஐந்து பூதலிங்கக் காட்சியும் கொண்டு அருள்பாலித்து வரும் வடதிருவானைக்கா சென்று உத்தராயன காலத்தில் ஆறு மாதம் தரிசித்தால் அருள் கிடைக்கும் என்று கூறினார். வீரசிம்மனும் அவ்வாறே வடதிருவானைக்கா வந்து தை மாதம் தொடங்கி ஆனி முடிய உள்ள உத்தராயண புண்ணிய காலத்தில் அழகாம்பிகையை வழிப்பட்டு ஆண்மையும் ஆற்றல் பெற்றதோடு கனவில் அழகம்மை தோன்றி நீலமாலை அணிந்து சக்கரவர்த்தி ஆவாய் என்று கூறினாள். மறுநாள் அதிகாலையில் நாககன்னி ஒருத்தி நாகமாய் வழியில் நீலமாலையுடன் இருந்து மறைந்தாள். அந்த நீல மாலையை கழுத்தில் அணிந்து தட்சிணாயனத்தில் ஆறுமாதத்தில் பல நாடுகளைப் பிடித்து மகா சக்கரவர்த்தியானதாக நீலமாலைப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
எண் திக்கிலும் புகழ் பெற்றது கருமணி. இந்த கருமணியை அறுபத்து நான்கு பஞ்சமுக ருத்திராட்சத்துடன் அணிந்து சிவராத்திரி, பிரதோசம் முதலான காலங்களில் அஞ்செழுத்து ஓதி சிவலிங்க பூசை செய்பவர்களுக்கு அட்டமா சித்திகளும் கைவரப் பெறுவர் என்று ஜெயவீர சித்தர் உலகுக்கு உணர்த்தினார். இந்த உண்மையை உணர்ந்த சோழநாட்டு தருமநாதன் உத்திர சம்புகேசுவரம் வந்து மேற்படி நியதிகள்படி கருமணி ருத்திராட்சம் அணிந்து ஐந்தாண்டு காலங்கள் அனுட்டானம் செய்து அட்டமா சித்திகளைப் பெற்று, அழகம்மையின் ஆணைப்படி அங்கம், வங்கம், கலிங்கம் முதலான நாடுகளுக்குச் சென்று பல சித்துகள் விளையாடி மாமுனிவராய் மீண்டும் உத்தர சம்புகேசுவரம் வந்து பல ஆண்டுகள் அழகம்மையை வழிப்பட்டு வந்ததாக கருமணிப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
அழகாம்பிகையின் மகிமையை உணர்ந்து அருள்பெற சிவசுந்தரி என்ற நாககன்னி செம்முத்து என்ற ஒரு திருவாபரணம் அணிந்து அழகம்மையை வழிப்பட்டுப் பல அற்புதங்களைப் புரிந்தாள். மகத தேசத்து மன்னன் உத்தர சம்புகேசுவரம் வந்து சிவசுந்தரியான நாக கன்னிகை மூலம் அருள் உபதேசம் கேட்டு மந்திர, எந்திர மற்றும் பஞ்சாட்சர மகிமையைத் தெரிந்து கொண்டான். பிறகு அழகாம்பிகைக்கு பொன்னும், பொருளும் காணிக்கை ஆக்கி வழிப்பட்டு அருளைப் பெற்று தன்னாட்டுக்குச் சென்று அழகாம்பிகையின் பூரணமான சிவசக்தி மகிமையை நாகதேவதையின் வழிகாட்டுதலுடன் உலகெங்கும் பரப்பியதாகச் செம்முத்துப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
பச்சமாலை என்ற கேரளச் செல்வி மந்திரங்களை உணர்ந்தவள். பல தேவதைகளின் அருள் பெற்றதோடு, மணிமந்திர சித்தி பெற்றவள். தன்னினும் சிறந்தவள் யாருமில்லை என்று இருமார்ந்து பல அற்புதங்கள் மற்றும் மாயாசாலங்கள் செய்து வந்தாள். அவள் ஒரு முறை உத்தர சம்புகேசுவரத்தில் வந்து தன் மாயா சாலங்களைச் செய்ய முற்பட்டபோது தடைப்பட்டது. அஞ்சி, அலறி, துடித்து அழகாம்பிகையின் அடிபணிந்து பல்லாண்டு போற்றி வழிப்பட்டு அரிய சித்திகளைப் பெற்று இமாசலம் வரை சென்று அழகாம்பிகையின் அருளாட்சியைப் பரப்பியதாக பச்சைமாலைப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
கலியுகத்தில் கண்கண்ட வரப்பிரசாதி அழகம்மை சமேத சம்புகேசுவரப் பெருமான் என்றும், கலி புருசன் சோகக் கொடுமையை நீக்குவதற்குத் திருநீறும் ஐந்தெழுத்தும் என்ற உண்மையை உலகம் அறியச் செய்யும் பணியில் ஈடுபடுபவர் நாரத முனிவர். கலியுகம் தான் பக்திக்கு ஏற்ற யுகம் என்றும், கந்தனும் சிவனும் ஒன்றே என்றும் நிர்ணயம் செய்து உத்தர சம்புகேசுவரம் வந்து ஐந்து லிங்கக் காட்சியும், ஆறுபடைவீட்டுக காட்சியும் கொண்ட முருகப் பெருமான் மற்றும் நவவீரர்கள் பெருமையைக் கண்டுகளித்து சிவ சுப்பிரமணியரின் திருவருளைப் பெற்றதாக நாரதப் படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
பஞ்சபூதங்களின் சொரூபம் ஒரே லிங்க வடிவமாக அகத்தியர் முதலான ஏழு முனிவர்களுக்குக் காட்சி கொடுத்த வரலாறு, சோதிலிங்கம், சுயம்புலிங்கம், படிக லிங்கம் போன்ற லிங்க வரலாறுகள் கூறப்பட்டுள்ளது. நினைப்பில் நின்று நினைத்ததை முடிக்கும் அழகாம்பிகையை அலை மகள், நில மகள் மற்றும் நாக கன்னியர்கள் முதலானவர்கள் புகழும் காட்சியும், அழகாம்பிகையின் திருவிளையாடல்கள் ஆகியவைகள் வடதிருவானைக்கா, சம்புகேசுவரர் மற்றும் அழகாம்பிகை படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஞான மொழி நல்கும் நந்தி எம்பெருமான் அருட்செங்கோல் நடத்தும் சிவ நந்தி, திரு நந்தி அதிகார நந்தீசுவரர் தத்துவங்களையும், லிங்காதாரணம், பசுமோத்தாரணம், நந்தி தரிசனம் என்ற மூன்று பொருள் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் வீர சைவ நெறி பரப்பி ஆண்ட சுதர்மன் என்ற அரசன், உத்திர சம்புகேசுவரம் வந்து நந்தீசுவரர், சம்புகேசுவரரை வழிப்பட்டு இத்திருத்தல மகிமையை கர்நாடக தேசத்தில் பரப்பியதாக நந்தீசுவரர் படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவ சுப்பிரமணிய கடவுள், குமார பரமேசுவரன் என்ற திருநாமம் தாங்கி, போருக்குச் செல்லும் முன்னர் செம்பாக்கம் குன்றின் மீது நின்று வீரவாகு முதலான நவவீரர்களுக்குக் கட்டளையிட்டதாகவும் போர் முடிந்த பிறகு வள்ளிதேவசேனா திருமணத்திற்குப் பிறகு அகத்தியர் முதலான ஏழு முனிவர்களுக்கு ஆறுபடைவீட்டுக் காட்சியும் கொண்ட திருமுருகனாய் காட்சி அளித்ததையும் கூறப்பட்டுள்ளது. மேலும் வீரவாகு தேவர், வீரகேசரி தேவர், வீரமகேந்திர தேவர், வீரமகேச தேவர், வீரபுரந்தர தேவர், வீரராக்கத தேவர், வீரமார்த்தாண்ட தேவர், வீராந்தக தேவர், வீரதீர தேவர் என்ற ஒன்பது நவவீரர்கள் அவதார மகிமையும் அவர்கள் முருகப்பெருமானுக்கு துணை புரியும் காட்சியும், விரிவாக குமாரபரமேசுவரர் மற்றும் நவவீரர்கள் படலத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டப்படி பல நாமமும் பல ரூபமும் கொண்டு திருவிளையாடல் செய்யும் பரம்பொருள் அழகாம்பிகை சம்புகேசுவரர் நாமம் கொண்டு செய்த திருவிளையாடல்கள் ஏராளமாக உத்தர சம்புகேசுவரர் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நால்வர்கள், அருணகிரிநாதர் முதலான அருளாளர்களால் பாடப்படவில்லை என்று சொல்வது தவறான கண்ணோட்டமாகும். மேற்படி அருளாளர்கள், திருக்கழுக்குன்றம், திருவிடைச்சுரம், திருப்போரூர் ஆகிய சிவத்தலங்களுக்கு வந்து பாடியுள்ளார்கள். மிகவும் பழமையானதும் மேற்படி திருத்தலங்களுக்கு அருகில் உள்ள இத்திருத்தலத்திற்கு நால்வர் அருணகிரிநாதர் முதலான அருளாளர்கள் நிச்சயம் வந்து பாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் பாடிய அனைத்து பாடல்களும் நமக்கு கிடைக்காத காரணத்தால் பல கோயில்கள் விடுபட்டுள்ளது என்பதே சரியான காரணமாகும். இருந்தாலும் இத்திருத்தலத்திற்கு புராணரீதியாக தல வரலாறு இருப்பதைக் கேட்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் பல அருளாளர்கள் இத்தல சீவமூர்த்தங்களைப் பற்றி சுமார் 200 பாடல்களுக்கு மேல் எழுதியிருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

செம்பாக்கம் உத்தர சம்புகேசுவரர் தல புராணத்தை திருவேற்காடு புராண நூலாசிரியரும், இறைபணி மன்ற ஆதீன கர்த்தருமாகிய லட்சக்கவியோகி அருட்கவியரசு சீர்வளர்சீர் தேவி கருமாரிதாச சுவாமிகள் அழகம்மை சம்புகேசுவரர் திருவருளால் 5555 செய்யுட்களால் அதாவது மூன்று காண்டங்கள் மற்றும் 32 படலங்களுடன் கீழ்கண்டவாறு எழுதப்பட உள்ளது.

துதிப்பாக்கள் வித்யாரண்ய படலம்
நாட்டுப் படலம் காசிநாதப் படலம்
திருத்தலப் படலம் கங்காதரப் படலம்
திருக்கையிலாயப் படலம் நீலமாலைப் படலம்
நைமி சாரண்யப் படலம் கருமணிப் படலம்
சிவதருமோபதேசப் படலம் செம்முத்துப் படலம்
திருநீற்று மகிமைப் படலம் பச்சைமாலைப் படலம்
திருவைந்தெழுத்து சிறப்புணர்த்தியப் படலம் நாரதர் படலம்
பஞ்சபூத தலப்படலம் திருவானைக்கா திருத்தலப்படலம்
கங்கை மகிமை தீர்த்தப்படலம் சம்புகேசுவரப்படலம்
ஏழு முனிவர் படலம் அழகாம்பிகைப் படலம்
சித்தர்கள் வருகைப் படலம் நந்தீசுவரப் படலம்
இந்திரப் படலம் குமார பரமேசுவரர் படலம்
நவக்கோட் படலம் நவவீரப் படலம்
கந்தருவப் படலம் அருளாட்சிப் படலம்
நாக கன்னியர் படலம் புராண மகிமைப் படலம்