......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில் பாடல்கள்

செம்பாக்கம் அருள்மிகு சம்புகேசுவரர் இறைபணிமன்ற அழகாம்பிகை ஆதீனம் சிவமய பீட ஆதீனகர்த்தர் லட்சக்கவியோகி அருட்கவியரசு சீர்வளர்சீர் தேவி கருமாரிதாச சுவாமிகள் வழங்கிய பாடல்கள்
சம்புகேசப் பெருமான்வாழ் செம்பாக்கம் திருத்தலத்தைக்
      கேட்டவரே ஞானி யாவர்
செம்பாக்கம் திருத்தலத்தைக் கண்ணுற்றோர் சீர்பெறுவர்
      பேர் பெருவர்! ஆயுள் ஒங்கும்
சம்புலிங்கம் கண்டோரே தத்துவத்தை உணர்ந்துநிதம்
      திருநீற்று நெறிவ ளர்ப்பார்
இம்மையிலே வாழ்வளிக்கும் செம்பாக்கம் திருத்தலத்தைக்
      கண்ணுற்று இன்பம் காண்பீர்.
பழமறையும் உபநிடதமும் ஆகமமும் புராணமுடன்
      பலகலையும் புகழ்ந்து போற்ற
அழகரசி அறிவரசி அருளரசி அன்பரசி
      அகிலமெலாம் காக்கும் தேவி
அழகம்மை யுடன்கூடி அருளாட்சி புரிநாதன்
      சம்புகேசப் பெருமான் வாழும்
அழகுநகர் செம்பாக்கம் சிவத்தலத்தைக் கண்ணுற்றோர்
      அகிலமெலாம் போற்ற வாழ்வர்.
  காமனை எரித்த நாதன் கண்ணுதல் சம்புகேசன்
மாமகள் மகிழும் திங்கள் கார்த்திகைச் சோமவாரம்
பூமலி வடவா னைக்கா புண்ணியத் தலத்தில் வந்தோர்
பூமியோர் புகழ வாழ்வார் விண்ணவர் வாழ்த்துவாரே.
கார்த்திகைத் திங்கள் நாளில் கண்ணுதல் சம்பு கேசன்
கீர்த்தியாம் லிங்கக் கோலம் தரிசித்த அன்ப ரெல்லாம்
நேர்த்தியாம் வாழ்வு பெற்று இம்மையில் பேறு பெற்றே
பூர்த்தியாய்க் கயிலை வாழ்வும் பொருந்துவர் உண்மையன்றோ.
உம்பரெலாம் புகழ்ந்தேத்தும் சம்புகேசர் அழகம்மை
அருளரசு புரியும் மூதூர்
செம்பாக்கத் திருத்தலத்து கார்த்திகையின் தலைத்திங்கள்
பெருவிழாவின் கீர்த்தி கண்டார்
இம்மையிலும் மறுமையிலும் நலம்பெறுவர், வாழ்நாளும்
நலம்பெறுவர் இன்பம் எய்தி
செம்மை நலம் நன்கோங்கி வாழ்வரெனின் திருத்தலத்தின்
பெருமையினைச் செப்பப் போமோ?
பழவினைப் புண்ணியத்தால் பரசிவத் தருளைப் பெற்று
அழகம்மை சம்பு லிங்கம் வாழ்கின்ற செம்பாக்கத்தின்
விழாவினில் சோம வார விழாவினை நடத்தும் அன்பர்
அழகம்மை அருளால் நன்கு வளம்பல பெற்று வாழி.
தட்சிணாமூர்த்தி
உருவளிக்கும் உயர்வளிக்கும் உயர்கலைகள் நனியளிக்கும்
      உள்ஞானத் திறன ளிக்கும்
திருவளிக்கும் சீரளிக்கும் தேயமெலாம் புகழ்கின்ற
      தேசளிக்கும் சிறப் பளிக்கும்
இருவளிக்கும் ஒருவளியைப் பெருவளியால் இணைக்கின்ற
      திருவளிக்கும் இயல்பு வாய்ந்து
மருவளிக்கும் கல்லாலின் கீழ்மர்ந்து மோனமுறும்
      மாண்குருவை மனத்திற் கொள்வாம்
தேவி கருமாரி
சிவசத்தி முச்சத்தி பராசத்தி அருட்சத்தி
      பெருஞ்சத்தி தேவ சத்தி
நவசத்தி நற்சத்தி பொற்சத்தி சிற்சத்தி
      நிலைசத்தி நளின சத்தி
தவசத்தி தலைகாட்டி நிலைமறைத்து அருள்செய்யும்
      கருமாரித் தாய்மை சத்தி
துவசத்தி சூலத்தி நாற்கரத்த ளாயமர்ந்து
      அரவணிந்த தூய சத்தி
திருநீறு
திருநீறே வாழ்வளிக்கும் திருநீறே அறிவளிக்கும்
      திருநீறே அருள ளிக்கும்
திருநீறே கலையளிக்கும் திருநீறே நிதியளிக்கும்
      திருநீறே ஞானம் நல்கும்
திருநீறே பிணிபோக்கும் திருநீறே திடமளிக்கும்
      திருநீறே பகையைப் போக்கும்
திருநீறே இன்பளிக்கும் தீருநீறே துன்பறுக்கம்
      தீருநீறே சிறந்த செல்வம்