......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில் பாடல்கள்

அருட்கவியரசு சீர்வளர்சீர் தேவி கருமாரிதாச சுவாமிகள் அருளிச்செய்த செம்பாக்கம் அருள்மிகு அழகாம்பிகை கவசம்
      
அருட்கலை வடிவ மாகி அறிவுணர் மூல மாகி
அருளுரு வான செல்வி அகிலத்தை ஈன்ற அன்னை
திருநெறி உணர்த்தும் தேவி சிவனிடம் உறையும் தாயாய்
அருளழ காம்பி கைத்தாய் அடியனேன் உளத்தைக் காக்க!
   
  ஆதியு முடிவு மில்லா அற்புத நடமி யற்றும்
சோதியன் பாதி யாகி சுந்தரி யெனத்தி கழ்ந்து
நீதியா லருள ளிக்கும் நிமலிசெம் பாக்க மேவும்
வேதமூ லத்தி என்றன் உணர்வினை நாளுங் காக்க!
   
  இருவினை சாரா வண்ணம் மும்மலம் ஓங்கா வண்ணம்
பெருவினை வாழ்வு தந்தே பெட்புறக் காத்து நாளும்
அருளொடு பொருளும் தந்தே ஆயுளும் புகழும் நல்கி!
ஒருசிவ தேவி அம்மை உத்தமி நாளுங் காக்க!
   
  ஈசனின் நெறியே யோங்க எழில்திரு நீறளித்து
பாசவே ரறுத்து எந்தன் மதியுணர் வீற்றி ருந்து
தேகமெல் லாம்பு கழந்தே திருவுறும் வாழ்வில் வாழ
பாசவங் குசத்தை யேந்தும் பார்வதி காக்க காக்க!
   
  உலகெலாம் ஈன்றோ ளாகி உயிரலொம் காப்பா ளாகி
அலகில்சீர் வடவா னைக்கா அத்தனின் இடம மர்ந்தாள்
நிலவணி தேவி என்றன் நல்லுடல் முழுதும் காக்க
புலனெறி புனித மோங்கப் பூரணி காக்க காக்க!
   
  ஊக்கமும் உணர்வ ளித்தே உறுதியும் வீரம் ஈந்தே
ஆக்கமும் நிறமளித்தே அழகம்மை காக்க காக்க
நோக்கினா லருளும் தேவி நுண்மதி யளித்துக் காக்க
வாக்கினில் வன்மை ஓங்க வாலைபூ ரணியாள் காக்க!
   
  என்னுளம் அமர்ந்த தேவி எண்ணெழுத் துணர்த்தி - நாளும்
மன்னிய புகழும் வாழ்வும் மங்காம லெனக் களிக்கும்
தென்றமிழ்ச் சீவ சத்தி நாரணி தினமும் காக்க
நன்றெலாம் என்று மோங்க நாரணி தினமும் காக்க!
   
  ஏழிசைச் செல்வி யாகி ஏழ்பவம் நீக்கிக் காக்கும்
வாழிசை வழங்கும் சத்தி வடவானைக் காவின் தேவி
வாழ்மதிப் பெருக்கில் ஓங்க வளமெலாம் நாளும் தந்தே
தாழ்வுறா வண்ணம் என்னைத் தகுநெறி முறையால் காக்க!
   
  ஐந்தெழுத் தோது நர்க்கே அருள்புரி அழகம்மைத்தாய்
சிந்தையில் குடிகொண்டோங்கி திருவளர் சிவத்தைக் காட்டி
விந்தைகள் புரியும் வண்ணம் வீரமாச் சைவம் நல்கி
முந்திவந் தென்னை காக்க முக்கண்ணி காக்க காக்க!
   
  ஒருமனத் துணர்வி லேத்தி ஒளிநெறி சிறக்க நாளும்
கருநெறி சாரா வண்ணம் கண்ணுதல் கழலைப் போற்றி
திருநீற்று நெறியில் நின்றே திறமுறும் ஆற்றல் பெற்றே
பெரும்பேறு பெற்று வாழ பார்வதி காக்க காக்க!
   
  ஓமெழுத் தோங்கி நன்கு ஒளிர்கின்ற வீர சத்தி
தாமெனும் செருக்கற் றோரின் தன்மதி யுளத்தே ஓங்கும்
ஓம் பொருட் கலையின் செல்வி ஓம்நெறி வகுக்க வந்த
ஓம் ஒளிர் செம்பாக் கத்தே ஓங்குமா தேவி காக்க!
   
  ஔவிய மில்லா மாந்தர் அகத்துணர் நோக்கும் தேவி
செவ்விய காலம் நோக்கி திருவருள் காக்கும் சத்தி
ஔபாசன வடிவ கொண்ட அழகம்மை தேவி என்றன்
செவ்விய வினைய றிந்தே திருவெலாம் அளித்து காக்க!
   
  கருத்துடன் போற்று வோரில் உளமமர் தேவ சத்தி
விருப்புடன் நாடு வோரின் வினையெலாந் தீர்த்துக் காக்க
பெரும்பொருள் புகழும் போகம் பெட்புறும் பேறு எல்லாம்
அருளழ கம்மை என்றும் அருளினால் அளித்துக் காக்க!
   
  ஙரத்தின் தன்மை யோர்ந்து இகநெறி யுணர்ச்சி யில்லா
அகமுணர் வுறாத மக்கள் அழுக்காறு கொண்ட மக்கள்
அகமபாவச் செயலால் என்றும் ஆபத்து நேரா வண்ணம்
சகமெலாம் காக்கும் அன்னை அழகம்மை காக்க காக்க!
   
  சற்சனர் நேசத் தாலே சன்மார்க்க நெறியில் ஓங்கி
பற்பல செயல்சி றக்கப் பார்வதி என்னைக் காக்க
அற்பர்கள் வீண ராலே அவமானம் நேரா வண்ணம்
கற்பகக் கருணை, நல்கும் அழகம்மை காக்க காக்க!
   
  ஞமலியின் நெறியு ணர்ந்தே ஞாலத்தை முற்றுமோர்ந்து
எமனையும் வெல்லும் ஆற்றல் இயல்புறப் பெற்றமந்திரம்
அமரரும் போற்றும் மந்திரம் சிவாயநம என்று ரைக்க
இமைநொடி உணர்வு மல்க அழகம்மை காக்க காக்க!
   
  டம்பமில் லதை வாழ்க்கை இடம்பொருள் ஏவல் ஆய்ந்து
தம்மையே யுணர்வ தற்கு தயாபரி காக்க காக்க
வம்பர்கள் தொடர்பை நீக்கி வாலையாள் காக்க காக்க
செம்பாக்கம் வாழும் தேவி எங்குடி மரபைக் காக்க!
   
  இணக்கமுற் றோங்கும் அன்பர் நண்பராய்த் திகழ்ந்திருக்க
வணக்கமும் பணிவும் ஈந்தே அழகம்மை காக்க காக்க
கணக்கறிந் தியற்றி நாளும் கண்ணுதல் அடியை ஏத்த
கணக்துடன் காலம் நீத்த அழகம்மை தேவி காக்க!
   
  தன்னைத்தான் அறிந்து ணர்ந்தே தான்சிவ மாய்வி ளங்கி
மன்னிய உயிர்கள் வாழ்த்தும் மாதவச் சீல ராக
என்னுளே இருந்து காக்கும் அழகம்மை காக்க காக்க
தென்றமிழ்ச் சம்பு லிங்கத் தேவிஎண் உயிரைக் காக்க!
   
  நல்லவன் என்றே என்னை நாடெலாம் புகழ்ந்தி சைக்க
வல்லவன் இவனே என்று மறியாளர் வாழ்த்தி சைக்க
அல்லலை நீக்கி நாளும் அழகம்மை காக்க காக்க
கல்வியும் செல்வம் ஈந்தே கண்ணுதல் தேவி காக்க!
   
  பஞ்சமா பாத கத்தைப் பாவமென்றெணணாப் பாவி
தஞ்சமென் றடைந்த போது தகுந்திரு நீறு சாத்தி
அஞ்செழுத் தோதும் போது அழகம்மை காட்சி தந்து
அஞ்சலென் றருளிச் செய்து அனுதினம் காக்க காக்க!
   
  மங்கையர் மயக்கி வாழ்ந்தே மதிமிக இழந்தோ னுக்கும்
துங்கவெண் பொடியை ஈந்து தூயநல் லுளமும் தந்தே
பொங்கர வணிந்த நாதன் பொன்னடி போற்று தற்கே
மங்காம லருள ளிக்கும் அழகம்மை காக்க காக்க!
   
  யகரம்போற் சூலங் கொண்டு எமபயம் நீக்கி என்னை
அகரத்தில் அமர்ந்த அன்னை அழகம்மை காக்க காக்க
இகத்தினில் நோய்சா ராமல் வருமிடி துன்போங் காமால்
யுகந்தோறும் காக்கும் அன்னை அழகம்மை காக்க காக்க
   
  இரவிலும் பகற்கா லத்தும் எத்தகு வேளை தோறும்
அரவெலாம் போற்றும் அம்மை அழகம்மை காக்க காக்க
ரவிமுதல் நவக்கோள் என்றும் இன்பமே அளிப்ப தற்கு
அரவணி சம்பு லிங்கத் தேவியால் அன்பால் காக்க!
   
  லலாடத்தி லிருந்தே என்றும் லீலைகள் புரியும் தேவி
புலன்களான் துன்பம் நீங்கப் பேரருள் புரிந்து காக்க
குலத்தினில் வந்தோர் மற்றும் குடிப்பிறப் புற்றோர் எல்லாம்
நலம்பெற வாழ்வதற்கே அழகம்மை காக்க காக்க!
   
  வல்வினை வாரா தென்றும் வாலையாள் என்றும் காக்க,
நல்வினை புரிவ தற்கே நாரணி தினமும் காக்க
சொல்லறம் முதல லாய தொய்லறம் இயந்து தற்கே
பல்லறம் வளர்த்த தேவி பராசத்தி காக்க காக்க!
   
  அழகம்மை என்று ரைத்தே வந்தடி பணிவோர் கண்டு
பழகுறும் நண்ப ராகிப் பழகுதற் கருள ளிக்கும்
அழகம்மை என்றுங் காக்க வடவானைக் காவி லோங்கும்
குழகரும் சம்பு நாதன் கறைவிலா தென்னைக் காக்க!
   
  வளமெலாம் பெற்ற வாழ்வில் வையகம் புகழ வாழ்ந்தே
உளத்துணர் மாறா தென்றும் உன்னடி போற்றி சைக்க
உளத்தினில் குடிகொண் டென்றும் அழகம்மை காக்க காக்க
கனங்கிமில் ஆற்றல் மங்க கருணையால் என்றும் காக்க!
   
  மறப்பிலா நினைப்பி னாலே மற்றவர் செய்த நன்றி
சிறப்பினா லேத்திப் போற்றி சிவசிவ என்று ரைத்தே
அறப்பெருஞ் செயலைச் செய்ய அழகம்மை காக்க காக்க
திறமதி சிறக்க என்னை சம்புமா தேவி காக்க!
   
  சினமுதல் குணங்க ளெல்லாம் சேராத சிந்தை யுள்ளோன்
கனித்தமிழ் வீர பத்ரன் கருமாரி தாச னாகி
அவையல் சூழ்செம் பாக்கத் தழஇயைப் புகழ்ந்த பாடல்
கனவிலும் எக்கா லந்தும் கருணையால் காக்கு மன்றே!
   
பாடல்கள்