......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில் பாடல்கள்

செம்பாக்கம் அருள்மிகு சம்புகேசுவரர் இறைபணிமன்ற அழகாம்பிகை ஆதீனம் சிவமய பீட ஆதீனகர்த்தர் லட்சக்கவியோகி அருட்கவியரசு சீர்வளர்சீர் தேவி கருமாரிதாச சுவாமிகள் இயற்றிய செம்பாக்கம் திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் நாமாவளி
 
செல்வ விநாயகர்
      
கலைவடி வாகிய கணபதியே
கருணை பொழியும் குணநிதியே
நிலையுளந் தந்தருள் நெறியோனே
நெறிதரும் செல்வ விநாயகனே!
தஞ்ச மென்றோர்க் கருள்புரியும்
சங்கர சிவசுத கணபதியே
நெஞ்சிருந் துணர்வருள் நித்தியனே!
நாடிய வரம்தரும் நாயகனே!
குறைகளை நீக்கும் குணக்குன்றே!
நிறைவருள் சிவமே! ஐங்கரனே!
வல்லமை தந்தருள் கணபதியே!
செல்வ விநாயக பரம்பொருளே!
கல்வியும் செல்வமும் அளிப்பவனே!
கழலடி பணிந்தோம் கணபதியே!
எண்ணம் ஈடேற்றும் கணபதியே!
என்றும் அருள்புரி நாயகனே!
வடத்திருக் காவுறும் விநாயகனே!
வந்தோர்க் கருள்தரும் சிவதேவே!
சரணம் செல்வ விநாயகனே!
சரணம் சரணம் கணபதியே!
சரணம் சரணம் தாள்பணிந்தோம்
சந்ததம் எங்களைக் காத்தருள்வாய்
சரணம் சரணம் நாயகனே
சரணம் செல்வ விநாயகனே!
   
 
முருகன்
  அரஹர சிவசிவ சண்முகனே!
அரஹர சிவசிவ பரம்பொருளே
அரஹர சிவசிவ வடிவேலா!
அரஹர சிவசிவ கலைநாதா!
நினைப்பவர் நினைப்பில் நடம்புரியும்
நித்திய சத்திய பரம்பொருளே!
ஐந்தெழுத் தாறெழுத் தொருபொருளாய்
அகிலங் காக்க வந்தவனே!
வடதிருக் காவுறும் குமரேசா!
திடமதி தந்தருள் சிவச்சீலா!
நவவீ ரர்க்கருள் நாயகனே!
நவநவக் கலைதரும் முருகேசா!
செந்தமிழ் நூல்விரித் தருள்செய்தாய்!
சிவசிவ தேவா! அருளரசே!
திருப்புகழ் கேட்டு உளமுருகி
திருப்பா கேட்டு நடம்புரிவோய்!
மந்திர தந்திர மங்களனே!
சுந்தர யந்திர சிவகுகனே!
சரணம் சரணம் சண்முகனே!
சரணம் சிவசிவ சிவகுகனே!
அழகாம் பிகைமகிழ் அருட்சுதனே!
அடியாரைக் காக்கும் சிவசுதனே!
சரணம் சரணம் முருகேசா!
சரணம் சரணம் குமரேசா!
 
.
அழகாம்பிகை
  அருள்வடி வாகிய சிவதேவி!
அழகாம் பிகையெனும் சிவசக்தி!
ஆதி சக்தியே அம்பிகையே
அற்புதம் புரிந்தருள் என்தாயே!
இருவினை தீர்க்கும் எழிலரசி!
இணையடி பணிந்தோம் அருளரசி!
ஈசன் இடத்தமர் அழகரசி!
ஈடிலா அருள்புரி கலையரசி!
உலகம் யாவும் படைப்பவளே!
உயிர்களை எல்லாம் காப்பவளே!
ஊழ்வினை நீக்கும் சிவதேவி!
வாழ்வருள் அம்பிகை அழகரசி!
என்னுளங் குடிகொள் அழகரசி!
எண்ணமும் எழுச்சியும் தருதேவி!
ஏத்திப் போற்றும் அன்பருக்கு
இகபர நலத்தரும் அழகரசி!
ஐந்தெழுத் தான சிவதேவி!
அழகாம் பிகையே அருளரசி!
ஒருமனத் துணர்வா நிதம்போற்றி
உன்னடி பணிந்தேன் அழகரசி!
ஒம்ஒளி உருவாய் அமர்ந்தவளே!
ஒதரும் கலைத்தரும் கலைத்தேவி!
ஒளவிய மில்லா மனத்தோர்க்கு
அருளைத் தந்தருள் அம்பிகையே
சரணம் அழகாம் பிகைத்தாயே
சரணம் சரணம் சிவசக்தி!
   
 
நடராசர்
  அம்பல மோங்கும் அருள்வடிவே!
நம்பி னோர்க்கருள் நடராஜா!
செம்பாக் கம்வாழ் நடராஜா!
சீர்தரும் ஐந்தவைத் திறத்தோனே!
அருளும் அன்பும் அறிவாகி
அருஉரு வடிவா யுற்றவனே!
அருளைப் பொழியும் நடராஜா!
அடிபணிந் தோர்க்கருள் சிவராஜா!
சிற்றம் பலமும் தில்லைவெளி
உற்றுணர் காட்சி தருபவனே!
பொன்னம் பலம்வளர் அருட்காட்சி!
பொருத்தக் காட்டும் பெருந்தேவா!
சித்திர சபையின் நடங்காட்டும்
திருவட வானைக் காத்தேவே!
ஐந்து பேரவை நடராஜன்
அருள்உருக் காட்டும் நடராஜா!
சரணம் சரணம் நடராஜா!
சரணம் சரணம் சபாபதி!
சரணம் சரணம் அருளரசே!
சரணம் சரணம் அம்பலவா!
சரணம் சரணம் நடராஜா!
சரணம் சரணம் தாள்பணிந்தோம்.
   
 
சம்புகேசுவரர்
  அருளுரு வாகிய சிவநாதா!
அருளைப் பொழியும் சிவதேவா!
ஆதியும் அந்தமும் அற்றவனே!
ஆனந்த வடிவங் கொண்டோனே!
இம்மை மறுமை நலந்தந்தே
என்றும் இன்பம் தருசிவமே!
ஈசா! நேசா! செம்பாக்கம்
வாசா தேவா! சிவசம்பு!
உண்மை யறிவாய் இன்போங்கும்
உத்தம சத்திய சிவநாதா!
ஊக்கமும் ஆக்கமும் தந்தருள்வோய்!
உத்தர சம்பு கேசுவரனே!
எல்லா வுயிர்க்கும் மூலவவே
எங்கும் நிறைந்த பரம்பொருளே!
ஏழ்பவம் நீக்கி வரமருளும்!
ஏழிசை நாதா! சிவதேவா!
ஐந்தெழுத் தோதுநர் அகமுறையும்!
அருட்பெருஞ்சோதி சிவநாதா!
ஒளிவடி வான சிலிங்கம்!
வெளிவடி வாயுறும் வித்தகனே!
ஒமெழுத் துறையும் சிவதேவே!
ஒதா துணர்கலை அருள்பவனே!
ஒளவியம் நீக்கும் அருளரசே!
அழகாம் பிகைமகிழ் அருளரசே!
சிவசிவ சிவசிவ சிவசம்போ!
சிவசிவ சிவசிவ சிவசரணம்!
சரணம் சரணம் சிவசம்போ!
சரணம் சரணம் சிவபோற்றி!
   
பாடல்கள்