......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

அமைவிடம்

அகில பாரதத்தில் தென்னாடு பொன்னாட்டிலும் சிறந்தது. தென்னாடுடைய சிவனே போற்றி என்பார் மாணிக்க வாசகர். இப்படிப்பட்ட தென்னாட்டில் தொண்டைவள நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், திருவிடைச்சுரம், அரணமர்ந்தபுரம் முதலான சிவத்தலங்களின் சூழலில் அமைந்துள்ளது செம்பாக்கம் என்னும் புண்ணிய திருத்தலமாகும். இது புராணங்களில் வடதிருவானைக்கா உத்தர சம்புகேசுவரம் என்றெல்லாம் சிறப்பாகப் போற்றப்படும் திருத்தலம்.
இத்திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டம்,திருப்போரூர்-செங்கற்பட்டு வழித்தடத்தில், திருப்போரூரிலிருந்து 7-வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என கோயில் கருவறை கோபுரத்திலுள்ள தொண்மையான சுதை சிற்பங்களால் விளங்குகிறது. இத்திருத்தலத்தைப் பற்றிய செய்திகள் மச்சபுராணம், கூர்ம புராணம், வாமன புராணம், பவிஷ்ய புராணம், லிங்க புராணம் ஆகியவற்றில் காணப்படுவதாக திருவேற்காடு புராண நூலாசிரியரும், செம்பாக்கம் உத்தர சம்புகேசுவரர் தல வரலாற்றை 5555 பாடல்களில் 32 படலத்தில் எழுத உள்ள அருள்மிகு சம்புகேசுவரர் இறைபணி மன்ற ஆதீனகர்த்தர் லட்சக் கவியோகி அருட்கவியரசு சீர்வளர்சீர் தேவி கருமாரிதாச சுவாமிகள் கூறியுள்ளதோடு, காஞ்சி மாமுனிவர் வணக்கத்துக்குரிய பெரியவர் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் 1985-ம் ஆண்டு மன்றத்துக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் செம்பாக்கம் அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயில் மிகப் பழமையான காலத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். நாவல் மரத்தை தல விருட்சமாகக் கொண்ட இத்திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையது. கண்ணுதற் கடவுளுக்கு உகந்த சோமவாரப் பெருமைப் பெற்றத்தலம். திருச்சி தென் திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத சம்புகேசுவரர் திருத்தலத்திற்கு இணையான அப்புத்தலம். திருமுதுக்குன்றம் (விருத்தாசலம்) அருள்மிகு குமாரதேவர் பாதம் பட்ட திருத்தலம்.