......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

சன்னதிகள்

திருக்கோயிலைச் சுற்றி மதில் சுவர்கள் அமைக்கப்பட்டு, மேற்குப் பகுதியில் கோயிலுக்குச் செல்ல பிரதான நுழைவு வாயில் உள்ளது. நுழைவு வாயிலுக்கு தெற்கு பக்கத்தில் 32' X 16' அளவில் அருள்மிகு சம்புகேசுவரர் இறைபணிமன்ற அழகாம்பிகை ஆதீனம் சிவமயபீடம் கட்டிடமும், அதற்கு அடுத்து திருக்கோயில் வாகனங்கள் பாதுகாப்பு கட்டிடமும், அதற்கு அடுத்து தென்மேற்கு மூலையில் (அக்கினி மூலையில்) தலவிருட்சமும் (நாவல் மரமும்), மரத்திற்கு கீழ் நாக சன்னதியும் அமைந்துள்ளது. பிரதான மூலவர் கோயிலுக்கு தெற்கு பக்கத்தில் அருள்மிகு சுந்தர விநாயகர் சந்நதியும், விழா மண்டபமும் தனியாக உள்ளது. மூலவர் சம்புகேசுவரர் சந்நதிக்கு மேல் பெரிய கோபுரமும், அழகாம்பிகை சந்நதிக்கு மேல் சிறிய கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நதிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒரு நுழைவு வாயிலும், மண்டபமும், அடுத்து நந்திதேவர், பலிபீடமும் உள்ளது. அம்மன் சந்நதிக்கு தெற்கு பக்கத்தில் ஒரு நுழைவு வாயில், மண்டபம் அதற்கு அடுத்து கோயில் கிணறும் உள்ளது. அருள்மிகு மூலவர் சம்புகேசுவரர் கிழக்கு நோக்கியும், அதற்கு அடுத்த மண்டபத்தில் அருள்மிகு சோமாசுகந்தர், முருகர் வள்ளி தேவயானை, நடராசர், நால்வர்கள் முதலான உற்சவ மூர்த்தி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதோடு, சுவாமி பள்ளி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த மண்டபத்தில் இடது பக்கத்தில் செல்வ விநாயகர் சந்நதி, நால்வர்கள் சந்நதியும், வடக்கு பக்கத்தில் முருகப் பெருமான் வள்ளி, தேவயானையுடன் கூடிய சந்நதியும், அதற்கு அடுத்து நவவீரர்கள் சந்நதி கிழக்கு நோக்கியும், மண்டபத்திற்கு வடக்குப் பக்கத்தில் அருள்மிகு அழகாம்பிகை சந்நதி தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான மூலவர் கோயிலுக்கு வெளிப்பிரகாரத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியும், மகா விஷ்ணு மேற்கு நோக்கியும், அடுத்து நான்முகன் வடக்கு நோக்கியும், சண்டிகேசுவரர் தெற்கு நோக்கியும், துர்க்கை அம்மன் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது. வடகிழக்குப் பகுதியில் நவக்கிரகங்கள் சந்நதியும் அமைந்துள்ளது.