......ஓம் நமசிவாய......
வழிப்பாட்டு நேரம்
காலை 10.00 - 12.00
மாலை 05.00 - 08.00

திருத்தல மகிமை

பஞ்சபூதலிங்க காட்சியை அகத்தியர் முதலான ஏழு முனிவர்கள் கண்டு வழிப்பட்ட திருத்தலம்.
திருநீற்று மகிமையும் ஐந்தெழுத்துண்மையும் விளக்கும் திருத்தலம்.
சித்தர்களும், யோகியர்களும் நித்தம் இரவில் வந்து வழிப்படும் திருத்தலம்.
நாககன்னி முதலான 32 நாக லோகத்து கன்னியர்கள் வாசுகி, அனந்தன், கார்கோடகன், ஆதிசேசன் முதலிய நாகராசாக்கள் சோமவார விரதம் இருந்து வழிப்பட்ட தலமாதலாலும், நாகங்களும் அடிக்கடி திருக்கோயிலுக்குள் வருவதாலும் இங்குள்ள அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரரை வழிப்படுகிறவர்களுக்கு நாக தோசங்கள் நீங்கி திருமணப் பாக்கியம், புத்திர சந்தானம் பெறுவர்.
நாவல் மரத்தை இயற்கையாக அக்கினி மூலையில் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலமாதலால் இத்திருத்தலத்தின் மகிமையைக் கண்டவர், கேட்டவர், சிறப்புரைத்தவர் இருபத்தொரு தலைமுறைக்கு இன்பம் பெற்று இனிது வாழ்வார்கள்.
இந்திரன், நாரதர், சூரியன், சந்திரன் முதலான நவக்கிரகங்கள் உத்திர சம்புகேசுவரத்துக்கு வந்து வழிப்பட்டுள்ளதாக புராண தல வரலாறு மூலம் தெரிய வருவதால் இங்குள்ள அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரரை வழிபடுகிறவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோசங்கள் நீங்கி பகைவராலோ, கடனாலோ, நோய்களாலோ ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும்.
செவ்வேலால் அருள்புரியும் முருகப் பெருமான் சூரனை அழிக்க திருப்போரூர் செல்லும் வழியில் செம்பாக்கம் குன்றின் மேல் நவ வீரர்களுக்குக் கட்டளையிட்டதாக வரலாறு கூறுவதாலும் இங்குள்ள முருகப் பெருமான் போர் முடிந்த பிறகு வள்ளி தேவசேனா திருமணத்திற்குப் பிறகு அகத்தியர் முதலான ஏழு முனிவர்களுக்கு ஆறுபடைவீட்டு காட்சியும் கொண்ட திருமுருகனாய் காட்சி தந்து அருளியதால் இங்குள்ள முருகப்பெருமானை செவ்வாய், சஷ்டி, கிருத்திகை முதலான நாட்களில் வழிப்படுகின்றவர்களுக்கு ஆறுபடைவீட்டிற்கு சென்ற பலனும், அங்காரக தோசம், ராகு கேதுக்களால் ஏற்படும் கால சர்ப்ப யோக தோசம் நீங்கும்.
ஐந்து சபை நடராசர் அருட்காட்சியை அகத்தியர் முதலான ஏழு முனிவர்கள் கண்டு தரிசித்த தலம். எனவே இங்குள்ள அருள்மிகு நடராசப் பெருமானை குறிப்பாக சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சுக்ல சதுர்த்தசி, புரட்டாசி சுக்ல சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சுக்ல சதுர்த்தசி முதலான நடராசருக்கு உகந்த அபிசேக தினங்களில் வழிப்படுகிறவர்களுக்கு திருவாலங்காடு இரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை முதலான ஐந்து சபைக்கு சென்று வந்த பலனும் தீராத வினைகள், மனக்கவலைகள் நீங்கி எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
இத்திருத்தலத்தில் அகத்திய முனிவரின் அருள் நலம் சார்ந்த ஆனந்தக் கூத்தர் என்ற பண்பார்ந்த சீடர் சீவ சமாதி கொண்டுள்ளதாக சிவரகசியம் என்ற ஞான நூல் மூலம் தெரிய வருவதால் ஆன்ம அதிர்வு இத்திருத்தலம் முழுவதும் வியாபித்து நிற்பதால் தீராப்பிணி, மன நடுக்கம், பயம் முதலான துன்பங்கள் நீங்கும். இத்திருத்தலத்தில் உள்ள அருள்மிகு அழகம்மை சம்புகேசுவரரை உள்ளன்போடு வழிப்படும் போது உடலில் அதிர்வு ஏற்படுவதை இன்றும் உணர முடிகிறது.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற சோமவாரம் விரதம் நம்முடைய பாரத நாடு தழுவிய விழாவாகும். பரஞ்சோதி முனிவரும் உத்தம விரதம் நம்முள் உத்தமம் திங்கள் நோன்பென்று உத்தம மறை நூலாதி உரைக்குச் சோமவாரம் என்று கூறியதைப் போல், செம்பாக்கம் உத்தர சம்புகேசுவரம், கண்ணுதல் கடவுளுக்கு உகந்த சோமவாரம் பெருமைப் பெற்ற திருத்தலம். சோமவார வழிபாட்டால் நம்முடைய ஆன்ம ஒளியை எழச் செய்கிறது. இதனால் உடல் தளர்வு, வறுமை, பகைமை நீங்கி நீண்ட காலம் முதுமையின்றி வாழ வழி செய்கிறது. மறுபிறவி வராவண்ணம் அருள்மிகு சம்புகேசுவரர் திருமூர்த்தம் காக்கிறது. இதுவே சோமவார விரதத்தின் அடிப்படை உண்மை. சோமவார தரிசனம் கோடி பாப விமோசனம். இறைபணி மன்றம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கார்த்திகை முதல் சோமவாரப் பெருவிழாவில் கலந்து கொண்டு வழிப்படுகிறவர்கள் மேற்குறிப்பிட்ட துன்பங்கள் நீங்கி இனிது வாழ்வர்.